சனி, 13 அக்டோபர், 2012

பணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன


InTheMedia430c
“காலம் மாறிவிட்டது” என்ற சொல் மக்களிடம் அடிக்கடி கேட்கக் கூடிய சொல்லாக புழங்கக் கூடியதாக இருக்கிறது. மக்களில் ஒருசாரார் தனக்கு விருப்பம் இல்லாத நிகழ்வு ஏதாவது நடந்தால்  “என்ன செய்வது எல்லாம் காலம் மாறிப்போச்சு” என்பார்கள். இது எந்த அளவிற்கு சரி என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். காலம் எப்படி மாறும்? காலம் மாறி விட்டது என்றால் இறைவனின் படைப்புகளான இயற்கை அனைத்திலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது அதனால் மனிதர்களின் வாழ்விலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
இறைவனது படைப்புகளான பூமி, சூரியன், நிலா, காற்று, நீர், நிலம் இவற்றின் இயக்கம் என்று எதிலும் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக இந்த இயற்கைக் கொடையின் சிலவற்றில் இன்றைய மனிதன் நாசத்தை ஏற்படுத்தி வருகிறான். சேதத்தை ஏற்படுத்தி வருகிறான். ஆனால் அன்றாடம் மக்கள் காலம் மாறிவிட்டது. மாறிய காலத்திற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புலம்பித் தள்ளும் காட்சியை பார்க்கின்றோம்.
காலம் மாறுமா?
யுகமுடிவுநாள் நெருங்குகின்றவரை அவ்வளவு எளிதாக காலம் மாறாது பிறகு மக்கள் புலம்பும் காலம் மாறுகிறது என்பதற்கு என்ன பொருள்?
மக்களின் மனநிலை மாறுகிறது என்று பொருள். மக்களின் மனநிலை மாறுகிறதா? மாற்றப்படுகிறதா என்றால் திட்டமிட்டு மாற்றப்படுகிறது என்பது தான் உண்மை. பணமும் மீடியாவும் ஒரு சிலரின் கையில் சிக்கி உலக மக்களின் மனநிலையை மாற்றுகிறது. பணமும் மீடியாவும் முதலாளித்துவத்தின் அசைக்க முடியாத சொத்துக்கள்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் இருவரும் எதை சிந்திக்க வேண்டும், அதில் எவற்றை செயல்படுத்த வேண்டும், என்ன உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும் அவர்களின் குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, வீட்டு விழாக்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து புற தேவைகளும் அமைய வேண்டிய விதம் குறித்து முடிவு செய்யும் ஆற்றல் அந்த நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் கையில் கிடையாது. அதை முதலாளித்துவமும் மேற்கத்திய உலகமும்தான் முடிவு செய்கிறது.
முதலாளித்துவத்தின் சுரண்டல் சிந்தனைக்கேற்ப அவற்றை உலகம் முழுவதும் நிலைநிறுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் மீடியா வலிமைக்கேற்ப மக்களின் மனநிலை வலிந்து மாற்றப்படுகிறது.
40-50 ஆண்டுகளுக்கு முன்பு பணம் எனும் ரூபாய் நோட்டின் தேவை பொது மக்களிடம் குறைவாகவே இருந்தது. காரணம் அன்றைய மக்களின் வாழ்க்கை தேவைகள் குறைவாகவே இருந்தது. அன்றாட உணவுத் தேவைகளை அவர்கள் வைத்திருந்த நிலமே பூர்த்தி செய்யும் அளவிற்கு இயற்கை சார்ந்த வாழ்வு முறையாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் கூட நிலவுடமை செல்வந்தர்களாக இருந்தனர். நிலம் வாங்குவது தான் சமூகத்தில் பெருமைக்குரிய அதிகபட்சத் தேவையாக ஆசையாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய நடுத்தர மக்களை மையப்படுத்தி மேற்கத்திய வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தயாரித்த நவீன உயிரற்ற ஆடம்பர பொருட்களை மக்களிடம் வலிந்து திணித்தனர். அந்தப் பொருட்களின் மேல் மக்கள் மோகம் கொள்வதற்காவே உருவாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சேனல்களை கொண்டு உலகம் முழுவதிலும் நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக மாற்றுகின்றனர். 24 மணிநேரமும் மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் பித்தம் தலைக்கேறி இன்றைய நடுத்தர சமூகம், வீட்டில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம்தியேட்டர், இன்னும் காஸ்மெட்டிக் சாமான்கள் என்று உயிரற்ற பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி குவிப்பதை பெருமைக்குரிய சொத்தாக நினைக்கிறது. இந்தப் பொருட்கள் இல்லாமல் வீடே இல்லை என்றும் இது இல்லாமல் வாழவே இயலாது என்றும் நமது மூளையில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டனர். இதற்காக பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக  இன்றைய சமூகம் கருதுகிறது.
நஞ்சை, புஞ்சை நிலங்கள், தோப்புகள், ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள செல்வங்களை கொண்டு இயற்கை வாழ்வு வாழ்ந்த மனிதன் இன்று உயிரற்ற எலக்ட்ரானிக் பொருட்களோடு நோயை வலிந்து வரவேற்கும் பாக்கெட் உணவுகளோடும் வாழும் மனிதனாக மாறிப் போனான். அப்படி வாழ்வதை பெருமையாகவும் படித்தவர்கள் வாழும் வாழ்க்கை முறையாகவும் கருதுகிறான். இதனால் இந்த பொருட்களை எல்லாம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் குவிகிறது.
இதுதான் மக்கள் கூறும் காலமாற்றம்.
இன்றைய சினிமா மற்றும் மீடியாக்கள் எந்த வாழ்வுமுறையை  மக்களிடம் திணிக்கின்றனவோ அதுவே தனக்கு உகந்த வாழ்வுமுறை. உணவு, உடை, கல்வி, மருத்துவம், கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் சினிமா, மீடியாவை பார்த்துப் பார்த்து அப்படியே காப்பியடிக்கும் மனிதனாக இன்றைய இந்தியன் / தமிழன் மாறிப் போனான். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கு அல்ல. இந்த மீடியாக்கள் அதிகம் குறிவைப்பது பெண்களைத் தான். அதனால் தான் பெண்கள் டிவி சீரியல்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். அதில் வரும் கதாபாத்திரங்களை தங்களுக்கான வழிகாட்டியாக கொள்கின்றனர்.
இந்த கோமாளித்தனமாக உணர்வற்ற உயிரற்ற வாழ்க்கை முறைக்கு சரியான மாற்றுத்திட்டத்தை முறையான வாழ்வு திட்டத்தை இஸ்லாம் முன்வைக்கிறது.
தேவைகளை குறைத்து இயற்கையோடு இயந்து வாழ இஸ்லாம் போதிக்கிறது.
ஆசைகளை அடக்காதே கடன்  வாங்கியாவது பொருட்களை வாங்கி அனுபவி என்று முதலாளித்துவம் கூவி கூவி அழைக்கிறது.
உள்ளத்தை மகிழ்வாக அமைதியாக ஆக்கிக் கொள் உன் வாழ்வு செழிக்கும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது!
உள்ளத்தைப் பற்றி கவலைப்படாதே உடலை சந்தோஷமாக சொகுசாக அனுபவிக்க விடு என்று முதலாளித்துவம் து£ண்டுகிறது!
வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்கிறது. அதை இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
வாழும் வரை வசந்தத்தை அனுபவி. எந்தத் தடையும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஊக்கப்படுத்துகிறது முதலாளித்துவம்!
உற்றார், உறவினர், குடும்பம், சமூகம், பூமி, என்று எல்லோரோடும் எல்லாவற்றோடும் இணைந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
உற்றார் உறவினர் குடும்பம் என்றெல்லாம் போட்டு அலட்டிக் கொள்ளாமல் தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை தான் சிறந்தது என்று முதலாளித்துவம் வலியுறுத்துகிறது!
இவ்வாறு தனிமனித வாழ்வு முதல் – உலகின் ஆட்சி முறை வரை எல்லா நிலையிலும் இஸ்லாம் முதலாளித்துவத்தோடு நேரடியாக அடிப்படையிலேயே மோதுவதால் இஸ்லாத்தின் மீதான வெறுப்புகளை மீடியாக்கள் மூலம் உலகம் முழுவதும் வலிந்து பரப்புகின்றனர். எல்லையற்ற பணத்தின் துணையோடு உலகையே தன்வசம் திருப்பும் ஆற்றலுடைய மீடியாக்கள் மூலம் தாங்கள் நினைத்த உடன் ஒரு பொருளை உலக மக்களிடம் திணிக்கின்றனர். தாங்கள் விரும்பாத அரசு நிர்வாகத்தை மாற்றுகின்றனர். உண்மையை மறைத்து பொய் செய்திகளை பரப்புகின்றனர். கேடுகெட்ட அவர்களின் கலாச்சாரத்தை உயர்தரமான கலாச்சாரமாக மாற்றுகின்றனர். அதையெல்லாம் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாத்தை கொச்சை படுத்துகின்றனர். படுபயங்கரமான கொள்கை என்று பறைசாற்றுகின்றனர். உலக மக்களிடம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய உலக மீடியாக்களில் 96 விழுக்காடு யூதர்கள் வசம்தான் உள்ளது. இவர்கள் உலக மக்களை தாங்கள் விரும்புவது போல மாற்றுகின்றனர்.
ஒன்றும் அறியாத மக்கள் காலம் மாறுகிறது என்று புலம்புகின்றனர்.
பணம் – மீடியா இவை இரண்டும் இருந்தால் உலகை நம் வசப்படுத்த முடியும். நாம் விரும்புவதை மக்களிடம் விதைக்க முடியும். இதுதான் இன்றைய உலகின் தாரக மந்திரம்.
இன்று
இணைவைத்தலையும் – கலாச்சார சீர் கெடுகளையும் விதைக்கின்றனர்.
நாளை
ஏகத்துவத்தையும் – இயற்கை வாழ்வையும் விதைப்பதற்கு
இறைநம்பிக்கையாளர்களுக்கு பணமும் – மீடியாவும் தேவை.
இறைவனிடம் பிரார்த்தித்து முயற்சிப்போம்!
- CMN சலீம்
நன்றி : சமூகநீதி முரசு 
அடுத்த தலைமுறையை  படித்த தலைமுறையக்கிட ,,,,,
அனைவரும்  இணைந்து  கல்வி சேவை செய்வோம் ! சமுகத்தை உயர்த்துவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக